கிராபிக்ஸ் பணிகளில் தொய்வு ஏற்பட்டதால் 2.0 படத்தின் பட்ஜெட் ரூ.550 கோடிக்கு உயர்ந்துள்ளது..!
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகத்தை 2.0 என்ற பெயரில் பிரம்மாண்டமாக எடுக்கின்றனர். படத்தில் கதாநாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய் குமாரும் நடிக்க படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.
கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் சில சிக்கல்கள் நீடிப்பதால் படத்தின் பட்ஜெட் மேலும் 100 கோடி வரை உயரும் நிலை உருவாகி உள்ளது. படத்தை எடுத்தபோது கிராபிக்ஸ் காட்சிகளுக்கு சரியான திட்டமிடல் இல்லாமல் எடுத்து இருப்பதாகவும், அதனால் தான் கிராபிக்சுக்கு திட்டமிடப்பட்ட பட்ஜெட் ஏறியதாகவும் கூறுகிறார்கள்.
படப்பிடிப்பு முடிந்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சில முறை தள்ளிப்போயுள்ள நிலையில், படம் வருகிற ஜனவரி 25–ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில், கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் இயக்குநர் ஷங்கருக்கு திருப்தி ஏற்படாததால், கிராபிக்ஸ் பணிக்கு மேலும் மெனக்கிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே படம் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், பட்ஜெட்டில் மேலும் ரூ.100 கோடி கூடியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.