காலாவை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என பிரபலம் கூறியதால் பரபரப்பு..!
‘காலா’ படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிப்பது இல்லை என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘குசேலன்’ படப்பிரச்சினை தொடர்பாக கேள்வி எழுந்தபோது அவர் வெறும் நடிகராக மட்டும் இருந்தார். தற்போது அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறி அரசியல் தலைவர் ஆகிவிட்டார். அவர் தனது அரசியல் லாபத்திற்காக காவிரி பிரச்சினையில் கன்னடர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
கன்னடர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அவர் நடித்த ‘காலா’ படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது. மீறி திரையிட்டால் கன்னட அமைப்பினர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் காவிரி பிரச்சினை தொடர்பாக ரஜினிகாந்த் ஆணித்தரமாக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், காவிரி நதி நீர் பங்கீட்டு அதிகாரங்களை காவிரி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.
மேலும் அவர், காங்கிரஸ் -ஜே.டி.எஸ். கூட்டணி அரசு காவிரி நீரை விவசாயிகளுக்கு திறந்து விட வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.
ரஜினிகாந்தின் இந்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் கர்நாடகாவில் ‘காலா’ படம் திரையிட தடை விதிப்பதாக கன்னட அமைப்புகள் அறிவித்து உள்ளன.