கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு : கருது தெரிவிக்கும் திரையுலகம்…!!
கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் சொன்னது தமிழ் திரையுலகை அதிர வைத்துள்ளது.
இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவாகின்றன. சுவிட்சர்லாந்தில் பாலியல் சம்பவம் நடந்த பிறகு 2014-ல் நடந்த தனது திருமணத்துக்கு வைரமுத்துவை சின்மயி அழைத்து அவர் காலில் விழுந்து ஆசிபெற்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
பாலியல் தொல்லை கொடுத்தவர் என்பது தெரிந்து இப்படி காலில் விழலாமா? என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். சின்மயியை வைரமுத்து ஓட்டலில் சந்திக்க சொன்னது எப்படி பாலியல் குற்றமாகும் என்றும் பதிவிட்டுள்ளனர்.
பாலியல் புகார்களால் தமிழ், தெலுங்கு பட உலகை கதிகலங்க வைத்த நடிகை ஸ்ரீரெட்டி பாடகி சின்மயிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, “ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் துர்க்கை, காளி, பார்வதி, பைரவி, சக்தி இருக்கிறார்கள். இந்த பிரச்சினையில் சின்மயி தைரியத்தை எல்லோரும் பாராட்ட வேண்டும்” என்று முகநூலில் பதிவிட்டு உள்ளார்.
நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில், “கவிஞர் வைரமுத்து மீது சில பெண்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். இப்படித்தான் இவர்? என்று யாரையும் உடனே முடிவு செய்யாமல், அவர்களது கருத்துகளை கேட்கவேண்டும். அதேநேரம் சின்மயி வலி பெரியது. உங்கள் கோபம் நியாயமானது. என்ன நடந்தது? உண்மை என்ன என்பதை விசாரித்து வெளிக்கொண்டு வரவேண்டும். சண்டை ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது அவசியம். இன்னும் நேரம் எடுத்துக்கொள்வோம். தைரியம் பெரிது” என்று கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் கூறும்போது, “இந்த தொற்றுநோய், எல்லோரது வாழ்விலும் ஏற்படக்கூடியது. ஆனால் இந்த சமூகத்துக்கு அதை நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். பெண் பலம் மிகப்பெரியது. நீங்கள் அதை சரியாக கையாண்டிருக்கிறீர்கள். அதை வெளிக்கொண்டு வாருங்கள். உங்கள் பணி தொடரட்டும்” என்று கூறியுள்ளார்.
DINASUVADU