ஏழை மக்களுக்கு நல்லது செய்ய வருகிறது ஜிஎஸ்டி வண்டி..!
ரஃப் நோட் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கோலிசோடா-2’. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகிய ‘கோலிசோடா’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா, ரோகினி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடுவதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்தை விஜய் மில்டன் இயக்கி இருக்கிறார். அச்சு இசையமைத்திருக்கிறார். இப்படம் ஜூன் 14ம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படக்குழுவினர் புதிய முயற்சி ஒன்றை செயல்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது, ‘இன்றைய காலகட்டத்தில் ஒரு பட வெளியீட்டிற்கு ஆகும் விளம்பர செலவு என்பது சராசரியாக கோடிகளில் கணக்கிடப்படுகிறது. இது வழக்கம்போல அனைத்து பட ரிலீஸுக்கும் இருக்கும் நடைமுறை. நாங்கள் அதிலிருந்து சிறிது விலகி படத்தின் விளம்பர செலவின் ஒரு பகுதியை ஆக்கபூர்வமாகவும் மக்களுக்கு உபயோகமாகவும் செலவழிக்கும் மாற்று சிறுமுயற்சியே இந்த ஜிஎஸ்டி வண்டி.
இந்த வண்டி ஒவ்வொரு ஊராக சென்று மக்களுக்கு தேவையான உணவு, மோர், இளநீர் ஆகியவற்றை வினிநோகம் செய்ய இருக்கிறது’ என்றார்.இது தொடர்பாக இயக்குனர் விஜய் மில்டன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.