எல்லையை மீறிய விஜய் ரசிகர்கள்! அத்துமீறி பள்ளிக்குள் போஸ்டர்கள் ஒட்டிய விஜய் ரசிகர்கள்!தவிக்கும் பள்ளி நிர்வாகம்
விஜயின் பிரம்மாண்ட பிறந்த நாள் போஸ்டர்கள் மதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஒட்டியது அந்த பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஜூன் 22-ம் தேதி பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். மதுரையில் விஜய்க்கு வாழ்த்து சொல்லி அவரது ரசிகர்கள் ஊரெல்லாம் பிரம்மாண்ட பிறந்த நாள் விழா போஸ்டர்களை ஒட்டி உற்சாகமடைந்தனர். நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வந்த நிலையில் நடிகர் விஜயையும் அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து போஸ்டர்கள் ஒட்டினர்.
விஜய் ரசிகர்கள் பொதுமக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பஸ் நிலையங்கள், முக்கிய சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியில் அந்த போஸ்டர்களை ஒட்டினர். தங்களுடைய அபிமான நடிகர்களுக்கு அவரது ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அதை எந்த இடத்தில் ஒட்டுகிறோம் என்பதில்தான் இருக்கிறது.
மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகே பனங்கல் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி இளங்கோவன் மேல்நிலைப்பள்ளியின் தடுப்பு சுவரை தாண்டி பள்ளி வளாகத்திலே பிரதான வகுப்பறை சுவரில் விஜய் பிறந்த நாள் போஸ்டர்களை விஜய் ரசிகர்கள், ஒட்டினர். அந்த போஸ்டர்களை பனங்கல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேடிக்கைப்பார்த்து செல்லும் உயரத்தில் பள்ளி சுவரில் அவர்கள் அந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
மதுரை மாநகர காவல்துறை பள்ளிகள் அருகே சினிமா போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்று பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால், அதை நடிகர்களுடைய ரசிகர்கள் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. இந்த முறை விஜய் பிறந்த நாளில் அவரது ரசிகர்கள், பள்ளி வளாகத்திற்குள்ளே அத்துமீறி நுழைந்து போஸ்டர்கள் ஓட்டியது, பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “ஆரம்பத்தில் எங்கள் பள்ளி வெளி காம்பவுண்ட் சுவரில்தான் சினிமா தியேட்டர் போஸ்டர்கள், நடிகர்களுடைய பிறந்த நாள் விழா போஸ்டர்களை ஒட்டுவார்கள். போஸ்டர்கள் ஒட்ட வரும் ரசிகர்களை எங்களால் தடுக்கவும் முடியாது. தட்டிக் கேட்கவும் முடியாது.
அவர்கள் ஒட்டிச் சென்றபிறகு நாங்கள் மறுநாள் மாணவர்களை விட்டு கிழித்து சுவரை சுத்தம் செய்வோம். தற்போது போஸ்டர்களை மாணவர்களை விட்டு கிழிக்கக்கூடாது என்று கல்வித்துறை கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது. பள்ளியில் உதவியாளர்கள் இல்லை. ஏணியில் ஏறிதான் அதை கிழிக்க முடியும். பள்ளியில் ஏணியும் இல்லை. ஆசிரியர்களால் மேலே ஏறி போஸ்டர்களை கிழிக்கவும் முடியவில்லை. அதனால், அப்படியே கிழிக்காமல் விட்டுவிட்டோம். எங்களால் என்ன செய்ய முடியும்?” என்றனர்.
மாநகர காவல்துறை அதிகாரிகள், போஸ்டர்கள் ஒட்டும் விஷயத்தில் கண்டிப்பான அறிவிப்புகளை வெளியிடுவது சரி, அதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது மாநகராட்சி பள்ளி வளாகத்திற்குள் காம்பவுண்ட் சுவரை தாண்டி போஸ்டர்கள் ஒட்டிய விஜய் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். போலீஸாரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.