இரும்புத்திரை படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் – விஷால் குற்றச்சாட்டு
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து திரைப்படம் இரும்புத்திரை. விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விஷால், அர்ஜுன், இயக்குனர் மித்ரன், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதில் விஷால் பேசும்போது, ‘இந்த படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு காட்சியில் என்னுடன் பாங்க் ஏஜெண்டாக நடித்த சக நடிகரை அடித்தேவிட்டேன். படத்தில் என்னுடன் நாயகியாக நடித்த சமந்தாவுக்கு நன்றி. கல்யாணமானால் நடிக்கக்கூடாது என்று இருந்த ஒரு விஷயத்தை இன்று அவர் உடைத்துவிட்டார். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது.
இந்த படத்தை வெளியிட நான் மிகவும் போராடினேன். பணத்தின் அருமை அப்போது தான் எனக்கு தெரிந்தது. என்னுடைய நண்பன் வெங்கட் காரை விற்று எனக்கு பணம் கொடுத்தார். இன்னொரு நண்பன் பத்திரத்தை விற்று பணம் கொடுத்தார்.
ஏன் என்னுடைய படத்தை வெளிவராமல் தடுத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை எனக்கு இது போல் நடந்தது இல்லை. தயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தையே இவர்கள் வெளிவராமல் தடுக்கிறார்கள் என்றால் யோசிக்க வேண்டிய ஒன்று தான்.
ஒரு தயாரிப்பாளர் சங்க தலைவரின் படத்தையே தடுத்துவிட்டோம் என்று காட்ட முயற்சி செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். படத்தில் உள்ள ஆதார் கார்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க கோரி போராடுகிறார்கள். அவர்கள் அனைவரும், தியேட்டர் அருகே போராடாமல் வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் போராடினால் யாருக்கும் இடைஞ்சல் வராது.
ஆர்யா தான் இதில் வில்லனாக நடிக்கவேண்டியது. அப்போது இருந்த வெர்ஷனே வேறு. இப்போது அர்ஜுன் சார் நடித்துள்ள இந்த கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்றுள்ளது. படம் வெளியாக எனக்கு ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி என்றார் விஷால்.