இரவு முழுவதும் சிறையில் நிம்மதியே இல்லை …!அழுது புலம்பிய சல்லு பாய்…!
நடிகர் சல்மான் கான், இருபது ஆண்டுகளுக்கு முன், மான் வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நிலையில், சிறையில் இரவு முழுவதும் அமைதி இன்றி தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற ஹிந்தி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கடந்த 1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி சென்றிருந்தனர்.
அன்றைய தினம் இரவு, ஜோத்பூரை ஒட்டிய கங்கனி கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் ‘வெளி மான்’ (பிளாக் பக்) என்ற அரிய வகை மான்கள் இரண்டினை சல்மான் கான் வேட்டையாடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது, மேற்குறிப்பிட்ட நடிகர்களும் அவருடன் இருந்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், நடிகர் சல்மான் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்தது. அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் உடனடியாக ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு கைதி எண் 106 வழங்கப்பட்டுள்ளது. சிறைக்கு வந்த பிறகும் அவரது ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தது. இரவு சாப்பிட சப்பாத்தியும், தாலும் தரப்பட்டது. ஆனால், சல்மான் கான் அதை சாப்பிடவில்லை. இரவு முழுவதும் அவர் அமைதியின்றி தவித்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு முழுவதும் தூக்கம் இன்றி அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அவர் தூங்குவதற்கு கட்டிலும், ஏர்கூலரும், போர்வையும் தரப்பட்டது. எனினும் அவர் தூங்காமல் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டு இருந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் காலையில், அவருக்கு உணவாக ரொட்டியும் முளைக்கொட்டிய பயறும் தரப்பட்டது. படிப்பதற்காக காலை இந்தி நாளிதழ் வேண்டும் என சல்மான் கேட்டார். அவர் விருப்பப்படி இந்தி நாளிதழ் தரப்பட்டது. நடிகை பிரித்தி ஜிந்தா மற்றும் வழக்கறிஞர்கள் சல்மான் கானை சிறையில் சந்தித்தனர்.
பல்வேறு படங்களிலும் ஒப்பந்தம் ஆகி இருப்பதால் உடனடியாக வெளியே வர அவர் விரும்புகிறார். ஆனால், உடனடியாக ஜாமீன் வழங்க ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றம் மறுத்து விட்டது. மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சல்மான் கான் இரண்டாவது நாளாக இன்றும் ஜோத்பூர் சிறையில் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.