1000 ரூபாய் பணத்துக்கு தடையில்லை… தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தடையில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். அதன்படி, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு முதற்கட்டமாக தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

இதில் குறிப்பாக பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு பணம் மற்றும் மற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் 70% வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு நாளைக்குள் வழங்கப்படும் என்றார்.

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பைக் சின்னம் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது என்று அக்கட்சி புகார் தெரிவித்த நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்தார். மேலும், இம்மாதம் ரூ.1,000 வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கும் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தடையில்லை. தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை தொடரலாம் என தேர்தல் விதிகள் உள்ளது. அதற்காக எந்த அனுமதியும் பெற தேவையில்லை என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.