சென்னை : கொசு விரட்டும் மருந்து இயந்திரத்தால் தீ விபத்து.? ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மூச்சுத்திணறி பலி.!

சென்னையை அடுத்த மணலி பகுதியில் எம்எம்டிஏ குறுக்கு தெருவில் வசிக்கும் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர் உடையார் என்பவரது வீட்டில் கொசு விரட்டியால் தீ விபத்து ஏற்பட்டு 3 குழந்தைகள், ஒரு மூதாட்டி என 4 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உடையார் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்ததால், அவரை கவனித்து கொள்ள அவரது மனைவி உடன் இருந்துள்ளார். இதனால் குழந்தைகளை பார்த்துக்கொள்ள பாட்டி சந்தான லட்சுமி வீட்டில் இருந்துள்ளார்.

நேற்று இரவு படுக்கையில், கொசு விரட்டி மருந்து ‘ஆன்(ON)’ செய்துவிட்டு உறங்கியுள்ளனர் என தெரிகிறது. அப்போது இரவில் கொசு விரட்டி மருந்து இயந்திரத்தை மூலம் மின்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தீ விபத்து ஏற்பட்டு புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, 60வயதான மூதாட்டி சந்தான லட்சுமி, 10 வயதான சிறுமி சந்தியா, 8 வயதான சிறுமி ரக்ஷிதா, 7 வயதான சிறுமி சந்தான பவித்ரா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

புகை மூட்டம் அதிகமாக இருந்ததாலும்,  கதவு திறக்கப்படாத காரணத்தாலும் அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்த போது 4 பெரும் சடலமாக இருந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உயிரிழந்த 4 பேர் உடல்களும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்த உறுதியான காரணங்கள் விசாரணைக்கு பின்னர் தெரியவரும் என கூறப்படுகிறது. இரவோடு இரவாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.