உயர்ந்தது அதானி பங்குகள்! ஏற்றத்துடன் நிறைவான இந்திய பங்குச்சந்தை!
வார இறுதி நாளான இன்று மும்பை பங்குச்சந்தை 77,117 புள்ளிகளுடனும், தேசிய பங்குசந்தை 23,707 புள்ளிகளுடன் நிறைவு பெற்றன.
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை இந்திய பங்குசந்தையில் பலமாக எதிரொலித்தது. அதனை தொடர்ந்து, தற்போதும் அதே போல அமெரிக்காவில் இருந்து வந்த குற்றசாட்டு இந்திய பங்குச்சந்தையை பாதித்தது.
அமெரிக்க வழக்கறிஞர்கள், அதானி குழுமம் மீது, அந்நிறுவனம் இந்தியாவில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அதனை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் குற்றசாட்டை முன்வைத்து நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த குற்றசாட்டை அடுத்து நேற்று, இந்திய பங்குச்சந்தை சற்று சரிவை சந்தித்தன. அதிலும், அதானி குழுமங்கள் மற்றும் அந்நிறுவனம் மீது முதலீடு செய்த மற்ற நிறுவனங்களின் பங்குகளும் நேற்று சரிவை சந்தித்தன. அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் நேற்று மட்டும் சுமார் 23% சரிவை சந்தித்தன. மேலும் ஒட்டுமொத்த பங்குச்சந்தையும் சற்று சரிவையே சந்தித்தன.
இதனை தொடர்ந்து இன்று, இந்திய பங்குச்சந்தைகள் சற்று ஏற்றத்துடன் வார இறுதி நாளை நிறைவு செய்துள்ளன. இன்று மும்பை பங்குச்சந்தை (BSE) 1961 புள்ளிகள் உயர்ந்து 77,117 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. தேசிய பங்குசந்தை (NSE) 557 புள்ளிகள் உயர்ந்து 23,707 புள்ளிகளுடன் உள்ளது.
மொத்தமாக முதலீட்டாளர்களின் மதிப்பு 7 லட்சம் கோடி வரையில் உயர்ந்துள்ளது. அதானி நிறுவன பங்குகள் இன்று ஏற்றத்தை கண்டுள்ளது. அதனை தொடர்ந்து, ரிலையன்ஸ் , ஐடி நிறுவன பங்குகளும் ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன.