இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாதனையை எட்டிய டிசிஎஸ்!
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிசிஎஸ் பங்குகள் பங்குசந்தையில் புதிய சாதனையை எட்டி, அதன் சந்தை மதிப்பு ரூ.15 லட்சம் கோடியைத் தாண்டியது. மும்பை பங்குசந்தையின் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, பிஎஸ்இ-யில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.4,135.9-ஆக (4%) உயர்ந்தது. இது முந்தைய பங்குசந்தையில் டிசிஎஸ்-யின் அதிகபட்சமான ரூ.4,043 ஐத் தாண்டியது.
இதன் மூலம், டிசிஎஸ்யின் சந்தை மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் முதல் முறையாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரூ.15 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் பங்குகள் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஐடி துறை நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவித்து வரும் வேளையில், டிசிஎஸ் நிறுவனம் ஏஐ துறையில் புதிய திட்டத்தைப் பெற்றுள்ளது.
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைவு.!
இந்த சூழலில், டிசிஎஸ் பங்குகள் நேற்று 52 வார உயர்வை எட்டிய நிலையில், இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ்யின் சந்தை மதிப்பு ரூ.15 லட்சம் கோடியை தாண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியது. உலகளாவிய உதவி மற்றும் பயணக் காப்பீட்டு நிறுவனமான யூரோப் அசிஸ்டன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பல ஆண்டு ஒப்பந்தத்தை வென்றுள்ளதாக டிசிஎஸ் கூறியதைத் தொடர்ந்து, பங்குசந்தையில் அதன் பங்குகளின் ஏற்றம் காணப்படுகிறது.
அதாவது, யூரோப் அசிஸ்டன்ஸ் (Europ Assistance) நிறுவனத்தின் ஐடி ஆப்ரேட்டிங் மாடலை செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் வைத்து மேம்படுத்தும் மாபெரும் திட்டத்தைப் டிசிஎஸ் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் பாரீஸ் நகரில் நடந்தது. இது ஒட்டுமொத்த ஐடி சேவை நிறுவன முதலீட்டாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறலாம். இதன் காரணமாகவே டிசிஎஸ்யின் சந்தை மதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும், பங்குசந்தையில் டாடா குழுமம் இரண்டாவது மதிப்புமிக்க இந்திய நிறுவனமாகும்.