பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 65,652 புள்ளிகளாக வர்த்தகம்..!
இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த சில வாரங்களாக இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அந்தவகையில், 2வது வாரத்தில் சென்செக்ஸ் 65,000 புள்ளிகளைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது. இந்தநிலையில் வாரத்தின் ஐந்தாவது நாளான இன்றும் மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 65,775 புள்ளிகளாக தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 94.09 புள்ளிகள் உயர்ந்து 65,652 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 38.30 புள்ளிகள் உயர்ந்து 19,452 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,558 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,413 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் குறியீடு 65 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம் நடைபெற்று வருவதால் முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்
இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
எச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மாருதி சுசுகி இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, என்டிபிசி லிமிடெட், மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்ல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.