நான்காவது நாளில் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.! 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.!
இந்திய பொருளாதாரம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கூட பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. இதில் சென்செக்ஸ் 200 முதல் 900 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகமானது. அதே போல நிஃப்டி 100 முதல் 200 புள்ளிகள் வரை சரிந்தது.
முந்தைய வாரங்களை போலவே இந்த வாரத்திலும் இந்தியப் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. இதனால் பல நிறுவனங்களின் பங்குகள் சரிவிலேயே இருந்தது, முதலீட்டாளர்களின் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. கடந்த வாரத்தில் ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.5 கோடிக்கும் மேல் இழந்துள்ளனர்.
வங்கி, நிதி மற்றும் உலோகப் பங்குகளின் பலவீனம், தடையற்ற வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போரும் பங்குச்சந்தை சரிவிற்கு காரணமாக உள்ளது.
ஆனால் முதலீட்டாளர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றமடைந்து வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, காலை 9.30 மணிக்குப் பிறகு மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 525.75 புள்ளிகள் உயர்ந்து 64,117.08 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 140.05 புள்ளிகள் உயர்ந்து 19,129.20 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 283.60 புள்ளிகள் சரிந்து 63,591.33 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. மேலும், நிஃப்டி 90.45 புள்ளிகள் சரிந்து 18,989.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
முன்னதாக, சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது. உலகளாவிய எண்ணெய் பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.0100 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 87.42 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 10 அல்லது 0.15% குறைந்து ரூ.6,772 ஆக விற்பனையாகி வருகிறது.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 4 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் உள்ளது. சென்செக்ஸில் இண்டஸ் இண்ட் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடக் மஹிந்திரா பேங்க், என்டிபிசி லிமிடெட், சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.
ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல், நெஸ்லே இந்தியா மற்றும் டெக் மஹிந்திரா லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.