எஸ்பிஐ வங்கிக் கணக்கில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையில் மாற்றம்!
நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ வங்கி கிளைகளில், 40 கோடியே 50 லட்சம் சேமிப்பு கணக்குகள் உள்ளன. இந்த வங்கி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகையை வாடிக்கையாளர்கள் பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச பராமரிப்புத் தொகையாக, பெருநகரங்களுக்கு 5,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. தொகையை பராமரிக்க தவறியவர்களுக்கு அபராதமாக 50 முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை வாடிக்கையாளர்களிடம் அபராத தொகையாக 1,772 கோடி ரூபாய் வசூலித்ததாக அண்மையில் தகவல் வெளியானது. எஸ்பிஐ வங்கியின் இந்த அபராத வசூல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து அபராதத் தொகையை குறைக்க எஸ்பிஐ வங்கி முடிவு செய்துள்ளது. இதன்படி பெருநகர கிளைகளில் 3,000 ரூபாயும், கிராமப்புறங்களில், 1,000 ரூபாயும் குறைந்தபட்ச தொகையாக சேமிப்பு கணக்குகளில் பாரமரிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லாதபட்சத்தில் மாதந்தோறும் நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு 6 ரூபாயும், கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு, 2 ரூபாயும் மட்டுமே அபராதமாக விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி ஜன்தன் உள்ளிட்ட வங்கிக் கணக்குகளுக்கு அபராதம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி அபராதத் தொகையை மேலும் குறைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் எனவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
source: dinasuvadu.com