EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?
RBI வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 6.25%-ல் இருந்து 6%-ஆக குறைத்துள்ளது. இதனால் வங்கி கடன் வட்டி விகிதமும் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், வங்கிகளில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்து 6% ஆக அறிவித்துள்ளார். இந்த முடிவானது கடந்த ஏப்ரல் 7 முதல் 9 (இன்று) வரை நடைபெற்ற MPC ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
RBI ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்ற பிறகு, 2வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரியில் 6.5%-ல் இருந்து 0.25% குறைக்கப்பட்டு 6.25% என குறைக்கப்பட்டது. தற்போது 6% ரெப்போ வட்டி விகித அறிவிப்பான் இன்று காலை 10 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த வட்டி குறைப்பு பற்றி கூறுகையில், உள்நாட்டு வளர்ச்சி மற்றும் பணவீக்க சூழல், பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில் பொருளாதர கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய பொருளாதரத்தில் நிச்சயமற்ற தன்மைகள் (டிரம்ப் வரி விதிப்பு) மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு பல்வேறு தடைகள் இருந்தாலும், பணவீக்கமற்ற வளர்ச்சியை நோக்கி நாங்கள் தொடர்ந்து பணியாற்றுகிறோம் என தெரிவித்தார்.
ரெப்போ வட்டி விகித குறைப்பின் தாக்கங்கள் :
- ரெப்போ விகிதம் 6.25% இலிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதால், வங்கிகள் RBI-யிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற முடியும். இதனால், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் வட்டி விகிதமும் குறையும்.
- வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற மிதவை வட்டி (ரெப்போ வட்டி பொறுத்து மாறும் வட்டி) விகிதத்தில் (floating rate) உள்ள கடன்களுக்கு மாதாந்திர தவணைத் தொகை (EMI) குறையும்.
- குறைந்த வட்டி விகிதம் தொழில் முதலீடுகளை அதிகரிக்கும். குறிப்பாக, ரியல் எஸ்டேட், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் பயனடையும்.
- இந்த குறைப்பு வங்கிகளுக்கு கூடுதல் பணப்புழக்கத்தை வழங்கி, கடன் வழங்கும் திறனை அதிகரிக்கும்.