கார்ப்பரேட் வரி குறைப்பினால் முதலீடு அதிகரிக்கும்! வேலைவாய்ப்புகள் உருவாகும்! பிரதமர் மோடி பெருமிதம்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை புள்ளிகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. பல நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்குவதற்கு இந்த வரி குறைப்பு வழிவகை செய்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவில் கடந்த சில வாரங்களாக வெளியான அறிவிப்புகள் முக்கியமாக கார்ப்பரேட் வரி குறைப்பு இது போன்ற அறிவிப்புகள் இந்தியாவில் வணிகம் செய்வதற்கான சிறந்த இடமாக மாற்றி வருகிறது. இந்த அறிவிப்புகள் மூலம் முதலீடுகளை ஈர்க்கவும், அனைத்து சமூகத்தினருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஒரு உந்துசக்தியாக இருக்கும் என அந்த டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலராக உயரும் என குறிப்பிட்டுள்ளார்.