சுவிட்சர்லாந்தில் மோடி பெருமிதம் ! இந்தியா என்றாலே வணிகத்திற்கு உகந்த நாடு தான்….
உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அருண் ஜேட்லி, சுரேஷ் பிரபு, பியுஷ் கோயல் உள்ளிட்ட 6 மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்றார். உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் 190 நாடுகளின் தலைவர்கள், நிறுவன சி.இ.ஓ.க்கள், வணிக வல்லுநர்கள் என 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
நேற்று டாவோஸ் நகருக்குச் சென்ற பிரதமர் மோடி, 60 நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற வட்ட மேசை ஆலோசனையில் கலந்து கொண்டார். இதில் ஏர்பஸ், ஐ.பி.எம்., BEA சிஸ்டம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கு பெற்று இருந்தனர்.
இதில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா என்றாலே வணிகத்திற்கு உகந்த நாடு என்றும், உலகளாவிய வணிகத்திற்கு இந்தியாவில் அற்புதமான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார். இந்தியாவின் பொருளாதார மேம்பாடு மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்பு குறித்தும் இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து முதலீட்டாளர்களை சந்தித்தும் பிரதமர் மோடி பேசவுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் உலக பொருளாதார மாநாடு இன்று தொடங்கியது. உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, டாவோஸ் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.நேற்று மாலை 5.30 மணிக்கு ஜுரிச் சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டுத் தலைவர்கள் வரவேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …