கலாநிதி மாறன் வருமானவரித்துறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு?
தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் , ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தொடர்பாக வருமானவரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி கலாநிதி மாறன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்திருக்கிறது.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தை தொடங்கியபோது, அதன் முதன்மை அதிகாரியாக கலாநிதி மாறனை அங்கீகரித்து வருமானவரித்துறை உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். கடந்த 6ஆம் தேதி வருமானவரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செயல்படாத தலைவர் என கலாநிதி மாறன் கூறுவதை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் செலுத்த வேண்டிய TDS பாக்கித் தொகையை வசூலிப்பதற்கான ஒரே நபர் கலாநிதி மாறன் தான் என்றும் கூறியிருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கலாநிதி மாறன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சென்னையில் வீடு உள்ள ஒருவர் எப்படி டெல்லி அலுவலகத்தின் அன்றாட பணிகளை கவனிக்க முடியும் என்றார். வருமான வரித்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள் வரவில்லை என்றும், டெல்லி உயர்நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என்றும் கூறினார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி துரைசாமி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.