உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய பரஸ்பர வரி உத்தரவை அடுத்து உலக வர்த்தகம் சற்று சரிவை சந்தித்து வருகிறது. அதன் எதிரொலி இந்திய பங்குச்சந்தையையும் கடுமையாக பாதித்து வருகிறது.

மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும் வெளிநாட்டு பொருட்களுக்கு இறக்குமதி (பரஸ்பர) வரியை அதிகரித்து உத்தரவிட்டார். இந்த வரி விதிப்பால் அமெரிக்காவில் வெளிநாட்டு பொருட்களில் விலை ஏறும் நிலை, இதனால் அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிப்பு ஆகியவை ஏற்படும் என கணிக்கப்பட்டது.
அதற்கேற்றாற் போல, ஏற்கனவே தங்கத்தின் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. தங்கத்தின் மீது முதலீடு செய்து வைத்திருப்போர் அதனை விடுவித்து வருவதால் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக சரிந்து வருகிறது என கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் இந்திய பங்குசந்தை வார தொடக்க நாளிலேயே முதலீட்டளர்களுக்கு பேரிடியாக பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சரிவு கடந்த வெள்ளிக்கிழமை முதலே ஆரம்பித்து விட்டது என்றும், அடுத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் பங்குசந்தை விடுமுறை என்பதால் இன்று திங்கள் வார முதல் நாள் பங்குச்சந்தை தொடங்கிய உடனேயே வரலாறு காணாத கடும் சரிவை இந்திய பங்குச்சந்தை நிலவரம் எதிர்கொண்டு வருகிறது.
மும்பை பங்குச்சந்தையை பொறுத்தவரை அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.19.4 லட்சம் கோடி குறைந்து ரூ.383.95 லட்சம் கோடியாகக் குறைந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டியில் மெட்டல் 8% சரிந்தது மற்றும் நிஃப்டி ஐடி 7% சரிந்தது. நிஃப்டி ஆட்டோ, ரியாலிட்டி மற்றும் எண்ணெய் & எரிவாயு ஒவ்வொன்றும் 5% க்கும் அதிகமாக சரிந்தன. இந்த சந்தையில், ஸ்மால்-கேப் குறியீடு 10% சரிந்தது, அதே நேரத்தில் மிட்-கேப் குறியீடு 7.3% சரிந்தது.
தற்போதைய நிலவரப்படி (காலை 10 மணி), மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2777.20 புள்ளிகள் குறைந்து, 72,587 47 என்றும், தேசிய பங்குச்சந்தை 936.40 புள்ளிகள் சரிந்து 21,968.05 என்றும் உள்ளது. உலகளாவிய வர்த்தக நிலவரம் பொறுத்து இந்த சரிவு மேலும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
அமெரிக்காவின் புதிய பரஸ்பர வரி விதிப்பின் எதிரொலி உலக நாட்டு வார்த்தைகத்தையே ஆட்டிவைத்து வருகிறது. ஜப்பானின் நிக்கேய் 7% சரிந்தது, தென் கொரியா 5% சரிந்தது, சீனாவின் புளூ-சிப் பங்குகள் கிட்டத்தட்ட 7% சரிந்தன, அதே நேரத்தில் ஹேங் செங் குறியீடு 10.5% க்கும் அதிகமாக சரிந்துள்ளது.