கடனை வாங்கி கனவு இல்லத்தை வாங்கிய பின், அறிந்திராத வரிச் சலுகைகள்!
வருமான வரி சட்டத்தில் பிரிவு 24, 80C, 80EE ஆகியவற்றின் படி திரும்ப செலுத்துப்படும் வீட்டுக் கடனில் அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டிற்கும் வரி விலக்கு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அளிக்கப்படுகிறது.
இந்த வரிச் சலுகை குடியிருப்பு சொத்து மீது மட்டுமே பெறக் கூடியது. இரண்டு பேர் இணைந்து சொத்து வாங்கும் பொழுது, இரண்டு பேருமே இணை உரிமையாளர் மற்றும் இணைந்து கடன் வாங்கியவர்களாக இருந்தால் மட்டுமே வரிச் சலுகை பெற முடியும்.
வீடு குடியேறிய பின்பே இந்த சலுகையை பெற முடியும். அசல் தொகையில் இந்த சலுகையை பெற முடியாவிட்டாலும், குடியேறும் முன்பு கட்டப்பட்ட வட்டி தொகையை பிரிவு 24 கீழ் ஐந்து தவணையில் திரும்பப் பெறலாம். வரிச் சலுகை பயனை பெற, ஐந்து வருடதிற்குள் குடியேறுவது நலம். அவ்வாறு முடியாத தருணத்தில், ஒரு வருடத்திற்கு அதிக பட்ச வரிச் சலுகையாக முப்பாதயிரம் மட்டுமே (2 லட்சதிற்கு பதில்) பெற முடியும்.
பிரிவு 24 கீழ் வீட்டுக் கடன் செயலாக்க கட்டணத்திற்கு (processing fee) விலக்கும், பிரிவு 80C கீழ் முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்கிற்கான அனுமதியும் உண்டு.
வங்கியில் வாங்கப்பட்ட வீட்டுக் கடன் தவிர உறவினர் மற்றும் நண்பர்களிடமும் கடன் பெற்றிருப்போம். வட்டி கட்டியதற்கான சாட்சியை சமர்பித்தால், இந்த வட்டியின் மீதும் விலக்கு பெறலாம். ஆனால் திரும்பச் செலுத்தப்படும் அசல் தொகை மீது பிரிவு 80C கீழ் மட்டுமே விலக்கு பெற முடியும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்து இருப்பின், எத்தனை சொதுக்கள் வரை இந்த வரிச் சலுகை பெறலாம் என்ற வரையுறுத்தல் அரசங்கத்தால் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்துக் கடன் திரும்பச் செலுத்துகையில், கூட்டு வரிச்சலுகையின் மேல் உச்ச வரம்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்தில், அசல் தொகை திரும்பச் செலுத்துகையில், பிரிவு 80C கீழ் ஒன்றரை லட்சம் வரை சலுகை பெறலாம். இதுவே வட்டி தொகை மீதான இந்த சலுகை மாறுபடும். தானே குடியிருக்கும் காரணத்திற்காக வாங்கப்படும் வீட்டிற்கு, இரண்டு லட்சம் வரை வரிச் சலுகை உண்டு. இதுவே வாடகைக்கு விடப்படும் போது, வீட்டுக் கடன் மீது கட்டப்படும் வட்டி அனைத்தும் வரிச் சலுகையாக திரும்பப் பெற முடியும்.
குருவி போன்று சேமித்து வைத்து கனவு இல்லத்தை வாங்குகையில், சிறு அளவில் சலுகைகள் கிடைத்தால் கூட சந்தோஷத்திற்கு அளவே இல்லை தான். இவ்வளவு சலுகைகள் இருக்க, வீடு வாங்க இதை விட சரியான தருணம் வாய்க்க வாய்ப்பில்லை என்பதே நிதர்சன உண்மை.