உலக நாடுகள் அனைத்தும், பொருளாதார சரிவில் சிக்கியுள்ள நிலையில், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி!
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உலக பொருளாதாரமே சரிந்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில், தனியார் கல்வி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் ஜெயக்குமார், இங்கிலாந்து தூதரக அதிகாரி பரத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, நமது கலாச்சாரம், பண்பாட்டில் பெருமை கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் அழகானது, என்றும் குறிப்பிட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார் உள்ளிட்டோர், ஒரு பகுதியைச் சேர்ந்த தலைவர்கள் இல்லை என்றும், அவர்களை தேசிய தலைவர்களாகவே கருதுகிறோம் என்றும், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தனது பேச்சில் குறிப்பிட்டார்.
வீட்டில் தாய் மொழியிலேயே பேச வேண்டும் என்று வலியுறுத்திய வெங்கய்யா நாயுடு, குழந்தைகள் அம்மா என்றே அழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், சீனா உட்பட உலக நாடுகள் அனைத்தும், பொருளாதார சரிவில் சிக்கியுள்ள நிலையில், இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாகவும், அதற்காக பொது மக்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் வெங்கையா நாயுடு கூறினார்.
முன்னதாக, தனி விமானத்தில் சென்னை வந்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை, விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.