ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம்..!4 வருசமா முடியல….4 மாசத்துல எப்படி முடியும் …!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
15 லட்சம் ரூபாய் செலுத்துவோம் என்ற கோரிக்கையை 4 ஆண்டுகளில் செய்யாதவர்கள் எப்படி 4 மாதங்களுக்குள் செய்வார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப்பணம் அனைத்தும் மீட்கப்பட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் விகிதம் செலுத் தப்படும் என்று 2014 மக்களவைத் தேர்தலின்போது, நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆட்சிக்கு வந்தபின், 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி இரவு திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த மோடி, இது கறுப்புப் பணம், கள்ளப்பணத்தை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கை என்று மக்களிடம் கூறினார்.
ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையிலும், பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தும் இரண்டாண்டுகள் ஆன பின்பும் இதுவரை, கறுப்புப் பணம் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது; எத்தனை இந்தியர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் செலுத்தப்பட்டது என்ற விவரங்களை பிரதமர் மோடி வெளியிட்டதாக தெரியவில்லை.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இந்தியர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் செலுத்தப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம்.ஒரே தவணையில் அல்ல, மெல்ல மெல்ல. ஆர்.பி.ஐயிடம் கேட்டிருக்கிறோம் ஆனால் தர மறுக்கிறார்கள். ஏதோ தொழில்நுட்ப பிரச்சினைகள் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இந்திய மக்கள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவோம் என்ற கோரிக்கையை 4 ஆண்டுகளில் செய்யாதவர்கள் எப்படி 4 மாதங்களுக்குள் செய்வார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.