சி.பி.ஐ. சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனு!
சி.பி.ஐ. சார்பில், அன்னிய முதலீட்டு நிதி மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு 14 நாட்கள் போலீஸ் காவல் வழங்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் 2007-ல் வெளிநாட்டிலிருந்து 300 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற்றது. உரிய அனுமதியின்றி பெறப்பட்ட இந்த முதலீடு தொடர்பாக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் உள்ள பிரச்சனையை தீர்த்து வைக்க லஞ்சம் பெற்றதாக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 24 மணி நேர சி.பி.ஐ காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் மீண்டும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவரை மேலும் 14 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்குமாறு சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ. வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தில், ஒரு நாள் காவலின் போது கார்த்தி சிதம்பரம் இருதய சிகிச்சை பிரிவில் இருந்ததால், எந்த தகவலையும் பெற முடியவில்லை என்று கூறினார்.
கார்த்தி தனது உடல் நிலை குறித்து எந்த புகாரும் கூறாத நிலையிலும் அவரை மருத்துவர்கள் இருதய நோய் பிரிவுக்கு மாற்றியது ஆச்சரியமளிப்பதாக சி.பி.ஐ. வழக்கறிஞர் கூறினார்.
முறைகேடு நிகழ்ந்த காலத்தில் அட்வான்டெச் ஸ்ட்ரடேசிக் கன்செல்டிங் (Advantage Strategic Consulting) நிறுவனத்திற்கு பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கான ஆவணங்கள் மற்றும் அந்நிறுவனத்துடன் கார்த்தி சிதம்பரத்தின் தொடர்பை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மானு சிங்வி, சம்மன் வழங்காமல் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக புகார் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.