மோசடி குற்றச்சாட்டின் பின்னணி! அதானி குழும பங்குகள், 46,000 கோடி இழப்பு.!
அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க்கின் மோசடி குற்றச்சாட்டை அடுத்து, அந்நிறுவனத்தின் பங்குகள் ரூ.46,000 கோடி இழந்தன.
அதானி குழுமம் பல வருடங்களாக பங்குகளை கையாளுதல் மற்றும் கணக்கியல்(அக்கவுண்ட்ஸ்) மோசடியில் பங்கேற்றுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சிவப்பு மண்டலத்தில்(பங்குகள் சரிந்து) வர்த்தகம் செய்யப்பட்டன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தடயவியல் நிதி ஆராய்ச்சி நிறுவனம் இந்த விசாரணையை நடத்தி வந்தது. அதன்படி அதானி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கௌதம் அதானியின் நிகர மதிப்பு சுமார் $120 பில்லியனாக இருக்கிறது, இது கடந்த மூன்று ஆண்டுகளில் $100 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்து தற்போதைய இந்த நிகர மதிப்பை அடைந்துள்ளது எனவும் அதே நேரத்தில் நிறுவனத்திற்கு சொந்தமான, ஏழு மிக முக்கியமான பொது வர்த்தக நிறுவனங்களும் சராசரியாக 819 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் முன்னாள் மூத்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான நபர்கள் இந்த விசாரணைக்காக நேர்காணல் செய்யப்பட்டனர், மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் அதானி குழுமம் அரசாங்கத்திற்கு எதிராக நான்கு முக்கிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளது, அவற்றின் மதிப்பு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட இந்த அறிக்கையை அடுத்து அதானி டோட்டல் கேஸ், அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் & சிறப்பு பொருளாதார மண்டலம், அதானி பவர் மற்றும் அதானி வில்மர் ஆகியவற்றின் பங்குகள் சுமார் 4 சதவீதம் வரை குறைந்து வர்த்தகம் செய்யப்பட்டது.
அதன்படி அதானி குழுமத்தின் ஏழு பங்குகள் சந்தை மதிப்பில் ரூ.46,086 கோடியை இழந்துள்ளன. அதானி டோட்டல் கேஸ் ரூ.12,366 கோடியையும், அதானி போர்ட்ஸ் ரூ.8,342 கோடியையும், அதானி டிரான்ஸ்மிஷன் ரூ.8,039 கோடியையும் இழந்துள்ளன.