14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு!
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி,அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இறக்குமதியை நிறுத்துமாறு முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதனை தொடர்ந்து, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
அதன்படி,தற்போது ரஷ்யாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும்,ரஷ்யாவின் கச்சா எண்ணெய்,எரிவாயு ,நிலக்கரியை அமெரிக்க துறைமுகங்களில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வரை ரஷ்யாவிடமிருந்து நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை அமெரிக்கா இறக்குமதி செய்து வந்தது.மேலும்,நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில்,இனி ரஷ்யாவின் கச்சா எண்ணெய்,எரிவாயு ,நிலக்கரியை அமெரிக்க துறைமுகங்களில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.அதன்படி,ஒரு கேலன்(4.5லிட்டர்) பெட்ரோலின் விலை 4.173 டாலர்களாக அதிகரித்துள்ளன. மேலும்,அடுத்த சில நாட்களில் ஒரு கேலன் 5 டாலர்கள் வரை உயரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்,தற்போது ஒரு கேலன்(4.5லிட்டர்) பெட்ரோலின் விலை 4.173 டாலர்களாக அதிகரித்துள்ளது.இதற்கு முன்னதாக ஜூலை 2008 இல், அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கேலன் 4.11 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.