பிடிவாரண்ட் விவகாரம் – 1 லட்சத்து 85 ஆயிரம் கோடிகளை இழந்த அதானி நிறுவனங்கள்!
தொழிலதிபர் அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த விவகாரத்தின் எதிரொலியாக, அதானி குழும பங்குகளின் விலை 10% முதல் 29% வரை சரிவை சந்தித்துள்ளது.
சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் (சுமார் ரூ. 2110 கோடி) லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், கௌதம் அதானி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதால் இந்தியாவில் அதானி நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில், அதானி நிறுவனங்கள் சுமார் 22 பில்லியன் டாலர் மதிப்பு அதாவது (இந்திய மதிப்பின் படி ஒரு லட்சத்து, 85 ஆயிரம் கோடிகள்) இழந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.
கௌதம் அதானியின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் 10 சதவீதம் சரிந்தது, அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன், அதானி பவர், அதானி வில்மர் மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் என்டிடிவி 8 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளது.
மேலும், அமெரிக்க முதலீட்டாளர்களின் பணத்தை முதலீடு செய்ததால், அமெரிக்க சட்டப்படி, அந்த பணத்தை லஞ்சமாக கொடுப்பது குற்றமாகும் என்பதால், அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்குக்கான விசாரணை தீவிரமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.