பொதுமக்களுக்கு அதிர்ச்சி..குறையும் கச்சா எண்ணெய் உற்பத்தி..! பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு..!
கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் (பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு) நாடுகள் முடிவு செய்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை 70 டாலர் (ரூ.5,757) என விற்பனை செய்யப்பட்ட ஒரு பீப்பாய் (பேரல்) கச்சா எண்ணெய் விலை 6% வரை உயர்ந்து தற்போது 80 டாலரை (ரூ.6,623) கடந்துள்ளது.
சவூதி அரேபியா, ஈராக் மற்றும் பல வளைகுடா நாடுகள் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாகக் கூறியதை அடுத்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதில் சவுதி அரேபியா ஒரு நாளைக்கு 5 லட்சம் பீப்பாய்கள் மற்றும் ஈராக் 2.1 லட்சம் பீப்பாய்கள் வரை உற்பத்தியைக் குறைக்கிறது. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், அல்ஜீரியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளும் குறைத்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கடந்த 10 மாதங்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.