ரூ. 5,280 கோடி வங்கி கூட்டமைப்பில் கடன்…!சிபிஐ மெகுல் சோக்சி மீது மேலும் ஒரு வழக்கு…!
கீதாஞ்சலி குழும நிறுவனர் மெகுல் சோக்சி மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதது தொடர்பாக ஏற்கெனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது 31 வங்கிகள் கொண்ட கூட்டமைப்பில் ரூ. 5,280 கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கீதாஞ்சலி குழுமம் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கி நிதிமோசடி தொடர்பாக கனரா வங்கியின் பஹ்ரைன் கிளை அதிகாரிகள் இருவரிடம் சிபிஐ விசாரித்துள்ளது. அதேபோல பாங்க் ஆப் இந்தியாவுக்கு பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் கிளையில் பணியாற்றும் அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன.
வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் கீதாஞ்சலி குழும உரிமையாளர் மெகுல் சோக்சி ஆகிய இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி ஹவுஸ் கிளையில் உள்ள சில அதிகாரிகளின் உதவியோடு கடன் உறுதியளிப்பு கடிதம் (எல்ஓயு) பெற்று மிகப் பெருமளவு மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இவர்கள் மீது பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்ததன் பிறகு ரூ. 12 ஆயிரம் கோடி அளவுக்கு இவர்கள் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள், தரகர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோக்சி, நீரவ் மோடி ஆகியோர் வெளிநாடு தப்பிவிட்டனர். இதில் நீரவ் மோடி ஹாங்காங்கில் தங்கியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. நீரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வர சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் உதவியை மத்திய அரசு நாடியுள் ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.