மோடி அரசால் ஜிஎஸ்டி ,பணமதிப்பிழப்பு என எல்லாமே தோல்வி …!சுப்பிரமணியன் சுவாமி பாஜக மீது ஆவேசம் …!

Default Image

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி வரியும் தோல்வி அடைந்த நடவடிக்கைகளாகும் என்று  கடுமையாக விமர்சித்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பிஸ்னஸ் ஸ்கூலில் தெற்கு ஆசியா வர்த்தக அமைப்பு சார்பில் 14-வது ஆண்டு வர்த்தக மாநாடு நடந்தது. இதில் பாஜக எம்.பி.யும், மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார். அந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையில் பாஜக 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் மிகப் பெரியவெற்றி பெறும். அதன்பின் இந்தியாவை மிக வலிமையாக, ஒருங்கிணைந்ததாக கட்டமைக்கப்போகிறோம். அதற்கான முழுப்பெரும்பான்மை 2019ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு கிடைக்கும்.

பாஜக 3 காரணங்களுக்காக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். முதலாவது, நரேந்திர மோடி தலைமையில் மிகச்சிறந்த நிர்வாகத்தை மீண்டும் மக்களுக்கு அளிக்க வேண்டும். இரண்டாவதாக, ஊழலுக்கு எதிராகப் போராடவும், மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அறிவுறுத்தவும், மூன்றாவதாக, இந்தியாவில் இந்துக்களின் நலனை பாதுகாப்பதற்காக ஆட்சிக்கு வர வேண்டும்.

2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின் பாஜக நாட்டில் ஊழல்களை பெருவாரியாக ஒழித்துவிட்டது. இரண்டாவது முறையாக 2019ம்ஆண்டு மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றால், நாட்டில் ஆங்காங்கே மீதமிருக்கும் ஒட்டுமொத்த ஊழல்களையும் ஒழித்துவிடும்.

வலிமையான, ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். அதேசமயம், சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் கிடையாது.

2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், பொருளாதார வளர்ச்சி இன்னும் பின்தங்கியே இருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரியும்(ஜிஎஸ்டி) மேலும் சிக்கலாக்கிவிட்டன.

பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய தோல்வியாகும். பொதுமக்களை சிறிதுகூட நினைத்துப்பார்க்காமல் எடுக்கப்பட்ட முடிவாகும். பணக்காரர்கள் மட்டுமே இதில் பலனடைந்தனர்.

அதேபோலத்தான் ஜிஎஸ்டிவரியும். ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தும் முன் மக்களையும், மற்ற அமைப்புகளையும், வர்த்தக நிறுவனங்களையும் தயார்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், யாரும் முழுமையாக தயாராகாமல் இருக்கும் போது இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

இன்னும் மக்களுக்கு ஜிஎஸ்டி வரி என்பது ஏற்க முடியாத கெட்ட கனவாக இருக்கிறது. 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஜிஎஸ்டிவரியை நடைமுறைப்படுத்தி இருக்க கூடாது.

இப்போதுவரை மக்கள் மத்தியில் ஜிஎஸ்டி வரி ஏற்றுக்கொள்ளமுடியாத வரியாகவே இருக்கிறது. இந்த வரிக்கு கட்டுப்பட்டு மக்கள் வரிசெலுத்துவதும் குறைவாகும். இதை ஏற்க வேண்டும். வர்த்தகம் செய்பவர்கள் மத்தியில் ஜிஎஸ்டி வரி என்பது, ஒரு வரித் தீரவிரவாதமாகும். அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்.

2019ம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும். குறிப்பாக நாட்டின் வளர்ச்சி 10 சதவீதத்தை எட்டும் அளவுக்கு திட்டங்கள் வகுக்கப்படும், உலகளவில் மிகச்சிறந்த பொருளாதார வல்லரசாக மாற்ற முயற்சி எடுக்கப்படும்.

கடந்த சில மாதங்களாக வங்கி மோசடி குற்றங்கள் அதிகரிக்க காரணம், அரசியல்வாதிகளும், வர்த்தகர்களும் கூட்டாக இணைந்து செயல்படுவதுதான் காரணமாகும். இதற்கு அடிப்படை ஊழல்தான். என்னைப் பொறுத்தவரை வங்கி மோசடிக்கு வங்கியின் கிளார்க்கை பிடித்து விசாரணை செய்வதற்கு பதிலாக, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற உயர்ந்த இடத்தில் இருக்கும் நபர்களைத்தான் பிடிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஊழலை படிப்படியாக குறைக்க முடியும் என்று  சுப்பிரமணியசுவாமி பேசினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்