தக்காளி விலை கடுமையான வீழ்ச்சி!கிலோ ரூ.3 விற்பனை …..
விளைச்சல் அதிகரித்துள்ளதான் காரணமாக, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை 3 ரூபாய் வரை சரிந்துள்ளது.
பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொப்பிடி, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, பேகாரஅள்ளி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தக்காளி விலை அதிகம் இருந்ததால், நடப்பு ஆண்டு விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டிருந்தனர். அத்துடன் நல்ல மழையும் பொழிந்ததால் தக்காளி விளைச்சல் அமோகமாக இருந்தது.
இதன்காரணமாக, மார்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய்க்கும், 15 கிலோ கொண்ட ஒரு கூடை 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் தமிழகத்தின் இரண்டாவது பெரிய காய்கறி சந்தையான ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலும், தக்காளி விலை கிலோ ஒன்றிற்கு 5 ரூபாயாக சரிந்துள்ளது. இதேநிலை நீடித்தால் பெரும் நஷ்டம் அடைவது மட்டுமின்றி, தக்காளியை சாலையில் கொட்டும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
source: dinasuvadu.com