குறைகிறதா பெட்ரோல் , டீசல் விலை : எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

Default Image

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த உலக மற்றும் இந்திய எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று(திங்கட்கிழமை) டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.
இதுபோன்ற நெருக்கடியான சூழலை சமாளிக்க பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் எண்ணெய், எரிவாயு ஆய்வில் ஈடுபடுவதற்கும், இவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று(திங்கட்கிழமை) டெல்லியில் நடக்கிறது. நிதி ஆயோக் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதில் சவுதி அரேபியாவின் எண்ணெய் இலாகா மந்திரி அல் பாலிஹ், ஆஸ்திரேலியாவின் பி.பி. எண்ணெய் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாப் டுத்லே, டோட்டல் நிறுவன தலைவர் பாட்ரிக் பவ்யானே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்துவது, இவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, எண்ணெய் துறையில் முதலீடுகளை ஈர்ப்பது, முதலீடுகளுக்கான விதிமுறைகளை எளிதாக்குவது, ஆழ்கடலில் எண்ணெய் வள ஆய்வு, ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை ஆகியவை பற்றி பிரதமர் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான திட்டங்கள் குறித்த ஆலோசனைகளுக்கு கூட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும், எனத் தெரிகிறது.கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் நடத்தும் 3-வது ஆலோசனை கூட்டம் இதுவாகும்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்