உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமானது!நிதியமைச்சர் அருண் ஜெட்லி
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ,உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமானது என்று கூறியுள்ளார்.
கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்,டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ஏ.டி.எம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணம் எடுக்கச் செல்லும் ஏ.டி.எம்களில் எல்லாம் இல்லை என்ற பதிலே கிடைப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத்தில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பெரும்பாலான ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பணம் இருக்கும் ஒரு சில ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாகவும் அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் கடந்த 15 நாட்களாக ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவுவதாக அங்குள்ளவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பணத்தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள விவகாரத்தில் பெரும் சதி உள்ளது என்றார்.
இதனிடையே பணத்தட்டுப்பாட்டை போக்குவது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் மத்திய நிதித்துறை அதிகாரிகள் டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது ரூபாய் நோட்டுகளை தேவைக்கு அதிகமாக வைத்துள்ள வங்கிகள், தட்டுப்பாடு நிலவும் வங்கிகளுக்கு கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விடுத்துள்ள செய்தி குறிப்பில், நாட்டில் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ள பணத்தேவையால் ஒரு சில மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அரசின் கையில் போதுமான அளவுக்கு ரூபாய் நோட்டுகள் இருப்பில் இருப்பதால் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பொருளாதார விவாகரத்துறை செயலாளர் சுபாஸ் சந்திர கார்க், தற்போது நாள் ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் அளவுக்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாகவும், இதனை 5 மடங்கு அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் , இதனால் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்றும் கூறியுள்ளார்.
பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கிகள் சங்கத்தினர், கர்நாடக வங்கிகளுக்கு அதிகமாக பணம் விநியோகிக்கப் பட்டுள்ளதாகவும், அங்கு வழக்கத்திற்கு மாறாக முதலீட்டை விட பணத்தை எடுப்பது அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனிடையே சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு ஆந்திர மாநிலம் அனந்தபூரில் இருந்து தனியார் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 1100 கோடி ரூபாயை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.