இன்று முதல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, சுங்கச் சாவடி கட்டண உயர்வு, காப்பீடுத் தொகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி தொழில் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
லாரி தொழிலை முடக்கும் வகையிலான பாதிப்புகளைக் களைய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவந்தால் விலை லிட்டருக்கு 20 ரூபாய் வரை குறையும் என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தென்மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் மேற்கொண்ட முடிவின்படி, வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.