இனி ஓவர்டைம் பணி செய்தால் ஊதியம் கிடையாது!ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மத்திய அரசு!
மத்திய அரசு ‘ஓவர்டைம்’ பணி செய்தால் வழங்கப்படும் ஊதியத்தை ஊழியர்களுக்கு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
ஆனால் இயந்திரங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்டோருக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய பணியாளர் பயிற்சித்துறையும், மத்திய செலவுத்துறையும் விளக்கம் அளித்துள்ளது. அதில், 7-வது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்துள்ளது, இதில் மத்தியஅரசு ஊழியர்களுக்குக் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், மத்திய அரசின் தொழிற்பிரிவு, இயந்திரங்களில் பணியாற்றுவோரில் தவிர அனைத்து ஊழியர்களுக்கும் ஓவர்டைம் பணியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அமைச்சகங்கள், துறைகளிலும் இந்த முடிவை செயல்படுத்தவும், இந்தத் துறைகளுக்கு கீழ் உள்ள பிரிவுகளிலும் கடைப்பிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சகங்கள், துறைகளிலும் ஆப்ரேஷனல் பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களைப் பட்டியலிட்டு அவர்களைக் கணக்கெடுத்து, அவர்களை பயோ-மெட்ரிக் வருகை பதிவோடு இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு உத்தரப்படி ஆப்ரேஷனல் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓவர்டைம் பணிக்கான ஊதியம் வழங்கப்படும் அந்த ஊதியம் மறு ஆய்வு செய்யப்படவில்லை.
அதேசமயம், மத்திய அரசு ஊழியர்கள் ஓவர்டைம் பணியை அவர்களின் துறைரீதியான மூத்த அதிகாரிகள் எழுத்துப்பூர்வ உத்தரவின் அடிப்படையில், அவசரக்காலம் கருதி செய்தால் அதற்குச் சம்பளம் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.