ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரதமரையும் விசாரிக்கணும்..!திருநாவுக்கரசர் வலியுறுத்தல்..!

ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகளும் சந்தேகங்களும் கேள்விகளும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22-ம் தேதி முதல் அவர் உயிரிழந்த டிசம்பர் 5-ம் தேதிவரை நடந்தவை குறித்து விசாரித்து அறிக்கையை மூன்று மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள், சசிகலா, தினகரன் ஆகியோர் மட்டுமல்லாமல், சிங்கப்பூர் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் பீலே, எய்ம்ஸ் மருத்துவர்கள், தற்போதைய முதல்வர், ஆளுநர், அமைச்சர்கள் என அனைவரிடமும் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இவர்களை மட்டும் விசாரித்தால் போதாது. பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். 
மாநிலத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது பிரதமர் ஏன் வந்து பார்க்கவில்லை? அவரை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஏன் சிகிச்சை அளிக்கவில்லை? என்பன தொடர்பாகவும் பிரதமரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.
திருநாவுக்கரசரின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment