யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!!

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை கடந்த வாரம் மர்மநபர்கள் சிலர் கொலை செய்ய முயன்றனர். இந்தச் சம்பவத்தில் இளஞ்செழியன் அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய போதிலும், அவரது பாதுகாப்பு அதிகாரி பலியானார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பில் முன்பு பணியாற்றி வந்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை முயற்சிக்கு உள்ளான நீதிபதி ஒரு தமிழர் என்பதால் யாழ்ப்பாணத்தில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வழக்கு விசாரணைக்காக சென்ற மூன்று போலீஸாரை மர்மநபர்கள் அடித்துக் கொன்றனர். இந்தச் சம்பவமும் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கொழும்பு ஐ.ஜி. புஜித் ஜெயசுந்தர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதை அடுத்து, அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பதற்றம் நிறைந்த பகுதிகளில் 24 மணிநேரமும் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என புஜித் ஜெயசுந்தர் தெரிவித்தார்.

author avatar
Castro Murugan

Leave a Comment