பிற மாநிலங்களை போல் தமிழகத்தில் நக்ஸ்லைட்டுகளால் நுழைய முடியவில்லை…!

பிற மாநிலங்களை போல் தமிழகத்தில் நக்ஸ்லைட்டுகளால் நுழைய முடியவில்லை…!

Default Image

ஜார்கண்ட், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் இன்றும் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்றும் தமிழகத்தில் தற்போது நக்சலைட்டுகள் இல்லை. என்றும் முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் கூறினார்.
கடந்த 1980-ஆம் ஆண்டு திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் நக்சலைட்டுகள் வேட்டையில் காவலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது நடந்தத் தாக்குதலில் காவல் ஆய்வாளர் பழனிசாமி, ஏட்டு ஆதிகேசவலு, காவலாளர்கள் முருகேசன், ஏசுதாஸ் ஆகிய நால்வர் நக்சலைட்டுகளால் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டனர்.
அவர்களின் நினைவாக திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நினைவுத் தூண் ஒன்று நிறுவப்பட்டது. கடந்தாண்டு அந்த நினைவுத் தூணை மண்டபம் போன்று புதிதாகக் கட்டி திருப்பத்தூர் காவலாளர்கள் புதுப்பித்தனர்.
தாக்குதலில் உயிரிழந்த தினமான ஆகஸ்டு 6-ஆம் தேதியை வீரவணக்க நாளாக திருப்பத்தூர், ஜோலார்பேட்டை காவலாளர்கள் மற்றும் மக்கள் அனுசரித்து வருகின்றனர். அதன்படி, நேற்று திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் உள்ள நினைவுத் தூண் முன்பு 37-ஆம் ஆண்டு வீரவணக்க அனுசரிப்பு நடந்தது.
இதில் ஓய்வு பெற்ற காவல் டி.ஜி.பி.தேவாரம், அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் ராமன், ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த நினைவுத் தூணில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர். அப்போது 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.
பின்னர் ஓய்வுப் பெற்ற காவல் டி.ஜி.பி. தேவாரம், “1981-ஆம் ஆண்டு இந்த வீரவணக்க நாளை அனுசரிக்கும்போது நாங்கள் மட்டும் தான் இருந்தோம். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வீரவணக்கத்தை அனுசரித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மக்களின் ஒத்துழைப்புதான்.
நக்சலைட்டுகளால் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம் அனுசரிப்பது இங்கு மட்டும் தான். வேறு எங்கும் கிடையாது.
தமிழகத்தில் தற்போது நக்சலைட்டுகள் இல்லை. ஜார்கண்ட், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் இன்றும் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் விழிப்புணர்வுடன் இருப்பதால், நக்சலைட்டுகளை ஒழிக்க முடிந்தது” என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மண்டல ஐ.ஜி. சி.ஸ்ரீதர், வேலூர் சரக டி.ஐ.ஜி. வி.வனிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பகலவன், கியூ பிரிவு காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் எம்.அசோக்குமார், திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், காவல் அதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், பல்வேறு துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், மக்கள் பங்கேற்று மலர் வளையம், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

Join our channel google news Youtube