நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக தான்…! திமுக மீது வீண் பழி சுமத்துகிறார் தம்பிதுரை – தங்கம் தென்னரசு கண்டனம்

உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை மீண்டும் கொண்டு வந்தது மத்திய பாஜக அரசு என்பதை மறைப்பதற்காக திமுக மீது வீண்பழி போட்டு பாஜகவையும் அதிமுக ஆட்சியையும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை காப்பாற்றுகிறார் என முன்னாள் பள்ளி கல்விதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்து விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக தங்கம் தென்னரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத பாஜக செய்தி தொடர்பாளராக தம்பிதுரை மாறியிருப்பது வியப்பளிக்கிறது என்று கூறியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நீட் தேர்வு என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் முதலில் அதை எதிர்த்தது திமுக. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த நேரத்தில் 2013 ஆம் வருடத்தில் நீட் தேர்வு கொண்டு வரும் மருத்துவ கவுன்சில் அறிவிக்கைகள் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது என்பது தம்பிதுரைக்கு தெரியவில்லை.
உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை மீண்டும் கொண்டு வந்தது மத்திய பாஜக அரசு என்பதை மறைப்பதற்காக திமுக மீது வீண்பழி போட்டு பாஜகவையும் அதிமுக ஆட்சியையும் காப்பாற்றுகிறார் என்று தோன்றுகிறது.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று திமுக ஆதரித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற துரும்பைக்கூட எடுத்துப்போடாத தம்பிதுரை, திமுக மீது குற்றம் சுமத்த தகுதியில்லாதவர் என்றும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

Leave a Comment