சசிக்கு சிறப்பு சலுகை என்பதற்கு ஆதாரம் உள்ளது: டி.ஐ.ஜி.,

சசிக்கு சிறப்பு சலுகை என்பதற்கு ஆதாரம் உள்ளது: டி.ஐ.ஜி.,

Default Image

பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என டி.ஐ.ஜி., ரூபா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், எனக்கும், டி.ஜி.பி.,க்கும் தனிப்பட்ட பிரச்னை ஏதும் இல்லை. இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். நான் ஆதாரம் இல்லாமல் புகார் கூறவில்லை. நான் எந்த விதிகளையும் மீறவில்லை. சிறையில் விவிஐபி சலுகை பெற சசிகலா சார்பில் ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது. சிறையில் என்ன நடந்தது என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும். அரசு அனுமதியுடன் விடுப்பு எடுத்திருந்தேன். மீண்டும் பணிக்கு வந்த போது, விதிமுறை மீறலை கண்டுபிடித்தேன். நான் அலுவலக நேரத்தில் தான் புகார் கடிதத்தை அனுப்பினேன். இந்த விஷயத்தில் பல்வேறு ஆதாரங்களுடன் கடிதத்தை அனுப்பியுள்ளேன். சிறையில் விசாரணை மேற்கொண்டால்உண்மை வெளி வரும். புகார்களை சம்பந்தப்பட்ட துறையின் தலைவருக்கே அனுப்பியுள்ளேன். அவரது துறையில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளேன். நான் சிறைக்கு சென்று ஆய்வு செய்த பின்னரே அறிக்கை அனுப்பியுள்ளேன். இதில், வதந்தி எது, உண்மை எது என குறிப்பிட்டுளேன். பாரபட்சமற்ற விசாரணை நடத்தினால், பல உண்மைகள் வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார். விசாரணைக்கு தயார்: முன்னதாக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணா அளித்த பேட்டி: சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. தனி சமையல் அறையும் அளிக்கப்படவில்லை. ரூ. 2 கோடி லஞ்ச புகார் வெறும் வதந்தி. புகாருக்கு ஆதாரம் இல்லை. டி.ஐ.ஜி., ரூபா எந்த விதிகளும் தெரியாமல் செயல்படுகிறார். சிறையில் சாதாரண அறையில்தான் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். விதிகளுக்கு உட்பட்டு தான் தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சசிகலாவை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். எந்த விசாரணையையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Join our channel google news Youtube