கர்நாடக அமைச்சரின் வீட்டில் இன்றும் வருமானவரித்துறையினர் சோதனை…!

By

பெங்களூரு:வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில், கர்நாடக மின் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, டி.கே.சிவகுமாருக்கு, 55, சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட, டில்லி மற்றும் கர்நாடகாவில் உள்ள, 39 இடங்களில், வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.பெங்களூருக்கு அருகே உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள, குஜராத்தைச் சேர்ந்த, 44 காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்களுக்கு தேவை யான வசதிகளை செய்து தந்து வரும் நிலை யில், சிவகுமார் மீதான இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகுமாரின் வீட்டில் நேற்று காலை 7 மணிக்கு துவங்கிய சோதனை விடிய விடிய நடந்தது. இதில் ரூ.11 கோடி அளவிற்கு கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.இந்நிலையில் 2வது நாளாக இன்றும் (ஆகஸ்ட் 03) அமைச்சர் சிவக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சிவக்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிவக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Dinasuvadu Media @2023