சொத்துக்களை வாங்க, விற்க ஆதார் எண் கட்டாயம்!!!

சொத்துக்களை வாங்க, விற்க ஆதார் எண் கட்டாயம்!!!

Default Image

கருப்பு பணம் , பினாமி பரிமாற்றத்தைத் தடுக்கும் வகையில், சொத்துக்கள் வாங்கும்போதும், விற்கும் போதும், பவர் அட்டர்னி கொடுக்கும் போதும், ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
மேலும், மின்னணு அடிப்படையில், ஆதாரை அடையாளமாகக் கொண்டு பத்திரப்பதிவு செய்யப்படுவதை கட்டாயமாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
இதற்காக பத்திரப்பதிவு சட்டம் 1908ல் பிரிவு 32, 32ஏ ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. “ இதன்படி பத்திரப்பதிவு, அல்லது சொத்துக்களை விற்கும் ஒவ்வொருவரும் ஆதார் அடிப்படையில் அடையாளமாக வைத்து செய்ய வேண்டும்’’ என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  
இதன் மூலம், பினாமி சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதும், கருப்புபணம் மூலம் ஏராளமான சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதும் தடுக்கப்படும்.  
இது தொடர்பாக மத்திய ஊரக அமைச்சகத்தின் கீழ் வரும் நில வளங்கள் துறை, ஏற்கனவே மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறது. அதில், பத்திரப் பதிவின் போது, கண்டிப்பாக ஆதார் அடிப்படையில், வாங்குவோர், விற்பவர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 

இதற்காக பத்திரப்பதிவு சட்டம் 1908-ல் சட்டத்திருத்தம் செய்து, ஆதார் அடிப்படையிலான பத்திரப்பதிவுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இது தொடர்பான வரைவு சட்டத்திருத்த மசோதாக்கள் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அதன்பின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 
நாட்டில் கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிக்கும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்த நடவடிக்கை மூலம் கருப்புபணம் குறைந்ததாக மத்திய அரசு தெரிவிக்கிறது. இதில் ரியல் எஸ்டேட் துறையில் புழங்கும் கருப்பு பணத்தை தடுக்கும் வகையிலும், பினாமி சொத்துக்களை தடுக்கும் வகையிலும் ஏற்கனவே பினாமி சொத்து தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் பினாமி சொத்து பரிமாற்றம் குறைந்துள்ளது. இதை இன்னும் தீவிரப்படுத்தும் நோக்கில் ஆதார் அடிப்படையிலான பரிமாற்றத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது
Join our channel google news Youtube