வியாபம் ஊழல் போன்றே ‘நீட்’ தேர்விலும் மிகப்பெரிய ஊழல்…!

புதுதில்லி-மத்தியப்பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு எப்படி ‘வியாபம்’ ஊழல்கள் நடைபெற்றனவோ,  அதேபோன்றே சென்ற ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான தேசியத் தகுதி-நுழைவுத் தேர்வு என்னும் ‘நீட்’ தேர்விலும் ஊழல்கள் நடந்திருப்பதாகவும். இதற்காக தேர்வு மேற்கொள்ளப்பட்ட கணினிகளில் மோசடிகள் செய்யப்பட்டதாகவும், வியாபம் ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த டாக்டர் ஆனந்த் ராய், தெரிவித்துள்ளார். இவற்றின்மீது  மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் தில்லி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இதில் சுமார் 500 மாணவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வியாபம் ஊழல்கள் நடைபெற்றதைப்போலவே ‘நீட்’ தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதிய மாணவர்கள் பல்வேறு மோசடியான வழிகளில் தேர்வுகள் எழுத அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தில்லி, நொய்டா, சண்டிகார், லக்னோ, புவனேஸ்வர் மற்றும் ராஞ்சி ஆகிய மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களில் பலர் இவ்வாறு  மோசடியான வழிகளில் தேர்வுகள் எழுதி, தேர்ச்சியும் பெற்று முதுநிலை மாணவர்களாகத் தற்போது படிப்பைத் தொடர்கிறார்கள் என்று டாக்டர் ஆனந்த்ராய் கூறுகிறார்.

மாணவர்கள் தேர்வு எழுதிய கேள்வித்தாளை முன்கூட்டிய கசியச் செய்திடும் விதத்தில் கணினியில் உள்ள மென்பொருள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது என்றும், இது தொடர்பாக காவல்துறையினர் நொய்டா மற்றும் சண்டிகார் ஆகிய இரு மையங்களை மட்டுமே இதுவரை விசாரித்துள்ளனர் என்றும் டாக்டர் ஆனந்த்ராய் கூறுகிறார்.
இதுதொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரித்து வந்த தில்லி காவல்துறை குற்றப்பிரிவு, இவ்வாறு கணினியில் மாற்றங்களைச் செய்து ஊழலில் ஈடுபட்ட புரோமெட்ரிக் டெஸ்டிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின்மீது குற்ற அறிக்கை  தாக்கல் செய்திருக்கிறது. தேர்வு நடத்திய தேசிய தேர்வுகள் வாரியம் இந்நிறுவனத்திடம் தேர்வுகளை நடத்த ஒப்படைத்திருந்தது. சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வினை எழுதினார்கள்.
இவ்வழக்கில் சாட்சியங்களை அழித்தமைக்காக எவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய டாக்டர் ஆனந்த்ராய், “இந்தப்புலனாய்வே மிகவும் கேலிக்கூத்தான ஒன்றாகும். இத்தேர்வுகளை  மோசடியான வகையில் எழுத அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் நாட்டின் முக்கியமான மருத்துவமனைகளில் தற்போது வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனவேதான் நான் இவற்றின்மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தில்லி உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறேன்,” என்றார்.
இவ்வாறு ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் டாக்டர் ஆனந்த்ராய், இந்தூர் மருத்துவர். 2005ஆம் ஆண்டிலிருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்டு செயல்பட்டு வந்தவர். வியாபம் ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததை அடுத்து, அவரை ஆர்எஸ்எஸ் 2013ஆம் ஆண்டில் கழட்டிவிட்டுவிட்டது. ஆர்எஸ்எஸ், பிரச்சாரகர்கள் கூட்டங்களுக்கும், வாராந்திர பட்டறைகளுக்கும்  அவருக்கு அழைப்பு விடுப்பதை நிறுத்திக்கொண்டது.  ஆர்எஸ்எஸ் சிந்தனாவாதிகளில் ஒருவரான  நானாஜி தேஷ்முக் என்பவர் பெயரில் சமூக சேவை செய்பவர்களுக்காக அளிக்கப்பட்டு வரும் விருது 2012-13ஆம்  ஆண்டிற்கு  டாக்டர் ஆனந்த்ராய்க்கு அளிக்கப்படும் என்று ஆர்எஸ்எஸ்-ஆல் கூறப்பட்டது. பின்னர் அதனையும்   அது விலக்கிக்கொண்டுவிட்டது.
“ஆர்எஸ்எஸ், ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொள்கிறது. எனினும்  அதன் தலைவரான மோகன் பகவத், வியாபம் ஊழல்கள் குறித்து இதுவரை ஒரு வார்த்தைகூட கூறவில்லை,” என்கிறார் டாக்டர் ஆனந்த்ராய்.

Leave a Comment