மாஜி அமைச்சர் திடீர் ராஜினாமா !!

மாஜி அமைச்சர் திடீர் ராஜினாமா !!

Default Image

 அ.தி.மு.க., சசிகலா அணியில், முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, பிளவு ஏற்பட்டுள்ளது. தினகரன் அணியில், முன்னாள் அமைச்சர்களான, செந்தில் பாலாஜி, பழனியப்பன், என்.டி.வெங்கடாசலம் ஆகியோர் உள்ளனர். இவர்கள், அமைச்சர் பதவி கேட்டு, பழனிசாமி அணியினருக்கு, நெருக்கடி கொடுத்தனர். தினகரன், ஜாமினில் வந்ததும், அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். முன்னாள் அமைச்சரும், பெருந்துறை, எம்.எல்.ஏ.,வுமான, என்.டி.வெங்கடாசலம், ‘அமைச்சர் பதவி இல்லையென்றால், மாவட்ட செயலர் பதவி வேண்டும்’ என வலியுறுத்தினார்.ஏனெனில், சசிகலா அணி, பன்னீர் அணி என, பிளவுபட்டபோது, அவருக்கு மாவட்ட செயலர் பதவி வழங்குவதாக, சசிகலா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், பழனிசாமி முதல்வரான பின், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை; இதனால் அதிருப்தி அடைந்தார். தன் எதிர்ப்பை, அவ்வப்போது, முதல்வருக்கு உணர்த்தி வந்தார்.சட்டசபை கூட்டத் தொடரில், முன்னாள் அமைச்சர்களான செந்தில் பாலாஜி, பழனியப்பன், வெங்கடாசலம் ஆகியோர் பேசும்போது, அரசின் குறைகளை சுட்டிக்காட்டினர். சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என, தகவல் பரவியது. தினகரன் தரப்பில், மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கு, அமைச்சர் பதவி வழங்கும்படி, நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர்களுக்கு, அமைச்சர் பதவி வழங்க, மூத்த அமைச்சர்கள் விரும்பவில்லை.எனவே, முதல்வர் பழனிசாமிக்கு, நெருக்கடி கொடுப்பதற்காக, முன்னாள் அமைச்சர் என்.டி.வெங்கடாசலம், தான் வகித்து வந்த, சட்டசபை அவைக்குழு உறுப்பினர் பதவியை, நேற்று ராஜினாமா செய்தார். இந்தக்குழுவின் தலைவராக, பன்னீர் அணியில் உள்ள, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் உள்ளார். உறுப்பினர்களாக, 18 பேர் இருந்தனர். தற்போது வெங்கடாசலம் ராஜினாமாவால், உறுப்பினர்கள் எண்ணிக்கை, 17 ஆக குறைந்துள்ளது.- நமது நிருபர் – 

Join our channel google news Youtube