குழப்பத்தில் கோஹ்லி! இந்திய அணியில் துவக்க ஜோடிக்கு சிக்கல் ….

By

முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், அடுத்த டெஸ்டில் ஷிகர் தவான், அபினவ் முகுந்த், ராகுல் என, இவர்களில் யார் துவக்க ஜோடியாக களமிறங்குவது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணியில் இடம் பெற்ற துவக்க வீரர் முரளி விஜய் காயத்தால் விலக, ஷிகர் தவான் அணிக்கு திரும்பினார். 
காலே டெஸ்ட் துவங்கும் முன், லோகேஷ் ராகுலுக்கு, வைரஸ் காய்ச்சல் அடிக்க, ஷிகர் தவான், அபினவ் முகுந்த் அணிக்கு துவக்கம் தந்தனர். இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் வரும் 3ம் தேதி கொழும்புவில் துவங்க உள்ளது. தற்போது, அணியின் முதல் நிலை துவக்க வீரர் ராகுல் காய்ச்சல் குணமடைந்து, அணிக்கு துவக்கம் தர தயாராக உள்ளார். இதனால், காலே டெஸ்டின் முதல் இன்னிங்சில் 190 ரன்கள் எடுத்த தவான், இரண்டாவது இன்னிங்சில் 81 ரன்கள் எடுத்து, பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட முகுந்த் என, இருவரில் ஒருவர், ராகுலுக்கு வழி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியை தேர்வு செய்வதில் கேப்டன் கோஹ்லிக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோஹ்லி கூறியது:
கொழும்பு டெஸ்ட் போட்டிக்கான அணித் தேர்வு என்பது சற்று சிக்கலானது என்பது உண்மை தான். தவான், முகுந்த், ராகுலுடன், நான்காவதாக முரளி விஜய் என, இந்திய அணிக்கு நான்கு பேர் துவக்கம் தர காத்திருக்கின்றனர்.
கடந்த 2014 மெல்போர்ன் டெஸ்டில் சொதப்பினார் தவான். தற்போது காலே டெஸ்டில் தவான் 190 ரன்கள் எடுத்துள்ளார். இதனால், வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கும். இதனால், துவக்க சிக்கலை எப்படி கையாளப் போகிறோம் என்பதை, அடுத்த சில நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள்.
இது கடினமான விஷயம் தான் என்றாலும், சூழ்நிலைக்கு தகுந்து முடிவெடுக்க வேண்டும். முதல் டெஸ்டில் இருவரும் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி. அதேநேரம், ராகுலை பொறுத்தவரையில் சாம்பியன் வீரர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதேநேரம், அணித் தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும், கொழும்பு டெஸ்டில் இடம் பிடிக்க முடியாத வீரர், சூழ்நிலையை புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.இவ்வாறு கோஹ்லி கூறினார்.

யாருக்கு வாய்ப்பு:

கடந்த 2016ல் இங்கிலாந்து தொடரில் சகாவுக்குப் பதில் இடம் பிடித்த விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் (42, 67, 71 ரன்) சிறப்பாக விளையாடினார். ஆனால் சகா அணிக்கு திரும்பியதும், பார்த்திவ் நீக்கப்பட்டார்.
இதேபோல, ரகானேவுக்குப் பதில் சென்னை டெஸ்டில் விளையாடி ‘டிரிபிள்’ சதம் அடித்த போதும், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில், கருண் நாயருக்கு இடம் கிடைக்கவில்லை. இதுபோல, கொழும்பு டெஸ்டில் யார் அணிக்கு துவக்கம் தருவர் என, பொறுத்திருந்து பார்க்கலாம்.

Dinasuvadu Media @2023