இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளாவுக்கு டும் டும் டும்… காதலரை கரம் பிடிக்கிறார்

இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளாவுக்கு டும் டும் டும்… காதலரை கரம் பிடிக்கிறார்

Default Image
திண்டுக்கல்: மணிப்பூரில் இரும்புப் பெண்மணியாக பல ஆண்டுகள் போராடிய இரோம் சர்மிளா மிக விரைவில் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறார். கொடைக்கானல் சார்பதிவாளரிடம் திருமண பதிவுக்காக விண்ணப்பம் செய்துள்ளார் இரோம் சர்மிளா.
மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் இரோம் ஷர்மிளா. அவரின் உண்ணாவிரதப் போராட்டம் 17 ஆண்டுகளாக நடந்தது.
உலகில் வேறு யாரும் அகிம்சை போராட்டத்தை இவ்வளவு ஆண்டுகளாக நடத்தியிருப்பார்களா என்பது கேள்விக்குறியே. இந்நிலையில், தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு தேர்தல் அரசியலில் குதித்தார் இரோம்.
சிலமாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் நடந்த தேர்தலில் இரோம் போட்டியிட்டார். அதில் மிக மிக சொற்பமான வாக்குகளை பெற்று தோல்வியை அவர் தழுவினார். தனது இளமை காலத்தை போராட்ட வாழ்வுக்கு அர்ப்பணித்த இரோமுக்கு மணிப்பூர் மக்கள் கொடுத்த பரிசு சொற்ப வாக்குகள்தான். இதனை உணர்ந்த அவர் அந்த மாநிலத்தை விட்டே வெளியேறினார்.
தேர்தல் தோல்வியால் விரக்தி அடைந்த இரோம், தமிழகத்தின் கொடைக்கானல் மலைக்கு வந்து தங்கினார். அவருடன் அவரின் நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவும் கொடைக்கானல் வந்து சேர்ந்தார்.
போராட்ட வாழ்க்கையை விடுத்து, திருமண வாழ்க்கையை வாழ முடிவெடுத்துள்ளார் இரோம். இது குறித்து இரோம் சர்மிளா கூறுகையில், எனக்கு தேவையான அமைதி கொடைக்கானலில் கிடைத்துள்ளது. எனது போராட்ட வாழ்வு வேறு வடிவத்தில் தொடரும்.
தேஷ்மந்த் கோட்டின்கோ கொடைக்கானலில் தங்கியிருந்து ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். திருமணத்துக்குப் பின் அவருடன் கொடைக்கானலிலேயே தங்கிவிடுவேன்.
மணிப்பூரில் 16 வருடங்களாக போராடி வந்த நான் தோல்வியைத் தழுவி இருந்தாலும் சோர்ந்து போகவில்லை. புதிய வகையில் நான் போராட தயாராகி உள்ளேன்.
மணிப்பூரில் தற்போதும் ராணுவத்தினர் கற்பழிப்பு மற்றும் கொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து புதிய வழியில் போராட உள்ளேன்.
30 நாட்களும் எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில், எங்களின் திருமணம் நிகழும். இந்திய தனி திருமணச் சட்டத்தின்படி கொடைக்கானலிலேயே திருமணம் நிகழ்வு நடக்கும் ‘ என்று தெரிவித்தார்.
Join our channel google news Youtube