திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றில் கலந்துள்ள கழிவுநீர், மக்கள் சோப்பு போட்டு குளித்த கழிவுநீர்தான் என சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ள கருத்து கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.
திருப்பூரில் கடந்த வாரம் பெய்த கனமழையின்போது நொய்யல் ஆற்றில் நுரை கலந்தபடி தண்ணீர் ஓடியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில சாய சலவை ஆலைகள் கழிவுகளை முறைகேடாக நொய்யல் ஆற்றில் கலந்துவிடுவதாகவும் இதனால் நொய்யல் ஆற்றங்கரையோர மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து திருப்பூரில் சாய சலவை ஆலை சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூரில் உள்ள சாய சலவை ஆலைகளால் 10 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதைப் பார்த்தால் யாரோ வேண்டுமென்றே சாய சலவை ஆலைகள் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக செய்த சதி வேலையாக தெரிகிறது. எனவே இதற்கெல்லாம் ஆலை உரிமையாளர்கள் பயப்பட வேண்டாம். ஆலைகளுக்கு அரசு உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் கருப்பண்ணன், செம காமெடி செய்தார். ஆற்றில் கலந்துள்ள நுரை, சாய சலவை ஆலைகளிலிருந்து வெளியான கழிவுகள் இல்லை. சாக்கடை நீரும் சோப்பு போட்டு மக்கள் குளிக்கும் கழிவுநீரும்தான் நொய்யல் ஆற்றில் கலப்பதாகத் தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்து பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அந்த நுரையை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் நுரைக்கு காரணம் மக்களா? ஆலைகளா? என பட்டிமன்ற பேச்சு போல பேசியிருக்கிறார் அமைச்சர் கருப்பண்ணன்.
வைகை ஆற்று நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோலை வைத்து மறைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகினார். இந்நிலையில் மக்கள் குளித்த கழிவுநீர்தான் நொய்யல் ஆற்று நுரைக்கு காரணம் என அமைச்சர் கருப்பண்ணன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமைச்சரின் இந்த கருத்தையும் அமைச்சரையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிழித்தெறிகின்றனர்.
Home Uncategory நொய்யல் ஆற்றில் நுரைக்கு காரணம் மக்கள் சோப்பு போட்டு குளித்ததுதான் காரணம் சாய பட்டறைகள் அல்ல...