“இது ஜெ. ஆட்சி இல்லை.. ஊழல் ஆட்சி” – மாஃபா பாண்டியராஜன் பரபரப்பு பேட்டி!!

0
145

தமிழகத்தில் தற்போதைய ஆட்சி ஒவ்வொரு நாளும் ஊழல் மயமான ஆட்சியாக உள்ளது என்றும், மறைந்த ஜெயலலிதா கொண்டு வந்த ஆட்சி என்பது மறைந்து, மக்களிடம் ஊழல் ஆட்சி என்ற எண்ணம் வலுப்பெறும் வகையில் உள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டன. அதிமுக அம்மா அணியின் பொது செயலாளர், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்லப்பட்டார்.
எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். ஜெயலலிதா இறந்ததை அடுத்து, அவர் போட்டியிட்ட ஆர்.கே. நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அணியென 3 ஆக அதிமுக இயங்கி வருகிறது. இந்த நிலையில், டிடிவி தினகரன், சில தினங்களுக்கு முன்பு அதிமுக அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார்.
ஆனால், டிடிவியின் நியமனம் கேலிக்குரியது என்றும், அதிமுகவில் டிடிவி தினகரன் இல்லை என்றும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகளால் குற்றம் சாட்டப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஊழல் ஆட்சி என்றும் மக்கள் பிரச்சனையை பார்க்காமல், ஆட்சியை பிடிப்பதில் மட்டும் அமைச்சர்கள் குறியாக இருக்கிறார்கள் என்றும் டிடிவி.தினகரன் ஆதரவாளர் தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ.வும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தற்போது, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் தமிழக அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை என்று கூறிவந்த தமிழக சுகாதார துறை, தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக கூறியது.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார். தமிழகத்தல் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கை போதுமானதாக இல்லை எனவும் மாபா. பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது நடைபெறும் ஆட்சி, ஒவ்வொரு நாளும் ஊழல்மயமான ஆட்சியாக உள்ளது என்றும், மறைந்த ஜெயலலிதா கொண்டு வந்த ஆட்சி என்பது மறைந்து, மக்களிடம் ஊழல் ஆட்சி என்ற எண்ணம் வலுப்பெறும் வகையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
சசிகலா, தினகரன் பதவி செல்லாது என தேர்தல் ஆணையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறலாம். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மதுசூதனன் தலைமையில் கட்சி இயங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிடும் என்ற அச்சத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக மாபா. பாண்டியராஜன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here