டொயோட்டா யாரிஸ் காரின் விற்பனை தேதி அறிவிப்பு..!
புதிய டொயோட்டா யாரிஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. மிட்சைஸ் செடான் கார் ரகத்தில் வர இருக்கும் புதிய டொயோட்டா யாரிஸ் கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்த மாதம் 18ந் தேதி புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. வரும் 23ம் தேதி முதல் புதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட இருக்கிறது. சில டீலர்களில் ஏற்கனவே முன்பதிவு துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. ரூ.50,000 முன்பணத்துடன் முன்பதிவு நடந்து வருவதாகவும், திரும்ப பெறுவதற்கான நடைமுறைகளுடன் இந்த முன்பணம் டீலர்களில் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105.5 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வர இருக்கிறது.
டொயோட்டா யாரிஸ் காரில் 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கை அசைவுகளால் கட்டுப்படுத்தும் வசதி, பின்புற இருக்கை பயணியருக்கான கூரையில் கொடுக்கப்பட்டு இருக்கும் ரியர் ஏசி வென்ட்டுகள், ஆம்பியன்ட் லைட்டிங் என ஏராளமான வசதிகளை பெற்றிருக்கிறது.
இந்த காரில் 7 ஏர்பேக்குகள், இபிடி மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. ஏசியன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர தர மதிப்பீட்டையும் பெற்றிருக்கிறது. ரூ.9 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.