ஏஜே பெர்ஃபார்மென்ஸ் நிறுவனத்துடன் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்கோமாடி ஸ்கூட்டர்(Scomadi) நிறுவனம் ஒப்பந்தம்
கடந்த 2005ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்கோமாடி நிறுவனம் துவங்கப்பட்டது. ஸ்கூட்டர் தயாரிப்பில் 60 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க பிராஃங்க் சாண்டர்சன் மற்றும் பால் மெலிசி ஆகிய நிறுவனங்களின் கூட்டணியில் ஸ்கூட்டர் தயாரிப்பை துவங்கியது. இங்கிலாந்து மட்டுமின்றி, ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் ஸ்கோமாடி ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கான வர்த்தக வாய்ப்பு உணர்ந்து கொண்டு தனது ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்காக, இந்தியாவை சேர்ந்த ஏஜே பெர்ஃபார்மென்ஸ் நிறுவனத்துடன் ஸ்கோமாடி ஸ்கூட்டர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
புனே நகரை சேர்ந்த ஏஜே பெர்ஃபார்மென்ஸ் நிறுவனம் தற்போது கார்களை இறக்குமதி செய்து தருவது மற்றும் பெர்ஃபார்மென்ஸை கூட்டுவதற்கான பாகங்களை இறக்குமதி செய்து தரும் வர்த்தகத்தில்ல ஈடுபட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஸ்கோமாடி ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் பொறுப்பை ஏஜே பெர்ஃபார்மென்ஸ் ஏற்றுக் கொள்ள இருக்கிறது. முதலாவதாக, ஸ்கோமாடி நிறுவனத்தின் 125சிசி ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஸ்கோமாடி டிடி125 என்ற மாடல்தான் முதலாவதாக வர இருப்பதாக தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் தாய்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 124.6சிசி 2 வால்வு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அப்ரிலியா நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படுகிறது.
ஸ்கோமாடி டிடி125 ஸ்கூட்டரில் முன்சக்கரத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 200மிீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. இந்த ஸ்கூட்டர் 100 கிலோ எடை கொண்டது. 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்திறன் உடையது.
இந்த ஸ்கூட்டர் ரூ.1.98 லட்ம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அடுத்து சக்திவாய்ந்த டிடி200 ஸ்கூட்டரும் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.