குட்டி யானையின் அடுத்த மாடல் விற்பனைக்கு வருகிறது..
‘குட்டி யானை’ என்று வாடிக்கையாளர்களால் செல்லமாக அழைக்கப்படும் டாடா ஏஸ் மினி டிரக் வரிசையில் ஏஸ் கோல்டு என்ற புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டாடா ஏஸ் வரிசையில் விற்பனையாகும் மாடல்களில் சிறப்பான சொகுசு, செயல்திறன், உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு என முக்கிய விஷயங்களில் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ளது ஏஸ் கோல்டு.
புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக்கின் தோற்றம் மற்றும் உட்புற வடிவமைப்புகளில் ஏற்கனவே இருக்கும் மாடல்களை ஒத்திருக்கிறது. அதேநேரத்தில், ஓட்டுனர் மற்றும் பயணிக்கான இருக்கைகள் சவுகரியமாக இருக்கும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
டாடா ஏஸ் கோல்டு மினி டிரக்கில் 702சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 16 எச்பி பவரையும்,, 37.5 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 2005ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஏஸ் மினி டிரக் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக இருக்கிறது.
டாடா ஏஸ் வரிசையில் தற்போது 15 மாடல்கள் விற்பனை செய்யப்படுகிறது. டாடா ஏஸ் ஸிப், மெகா, மினி, மேஜிக் மற்றும் மந்த்ரா, சூப்பர் ஏஸ் என பல்வேறு எடை சுமக்கும் திறன்களில் கிடைக்கிறது. டாடா ஏஸ் டிரக்குகள் இலகு ரக வர்த்தக வாகன மார்க்கெட்டில் 68 சதவீத பங்களிப்பை பெற்றிருக்கின்றன.
புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் ரூ.3.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.